வித்தியாச விமர்சக விதிகள் (2015) – by Sivakumar Kanagaraj
- ழான் பேர்போ, போ தா ங்கோத்தா, போன்ற இயக்குநர்களைத் தெரியுமா? அவர்களின் படங்களைப் பார்த்திருக்கிறீர்களா? அவர்கள் பேசும் பேரன்பும் பெருத்த அவமானங்களும் உங்களுக்குப் புரியுமா? இந்த லெபனான் இயக்குநரகள் கூறுவதென்ன? காட்சியூனூடே கலந்து செல்லும் நீட்சியின் ஒருதுளி விள்ளலே காட்சிப்படுத்தலை நியமிக்கும் அனுக்கூறு, அதன் தன்மையானது நீரின் அடி ஆழம் வரை சென்று அலசிக் கழுவி மேலெலும் இயல்புடையது. நீதி – இக்காலத்தில், ஐன்ஸ்டைனின் அறிவியலயே மூன்று வரிகளுக்குள் புரிந்துகொண்டு விடுகிறார்கள், ஆதலால் விமர்சனம் என்பதை அடுத்த கட்டத்திற்க்கு எடுத்துச் செல்ல வேண்டிய கடமை நமக்கிருக்கிறது.. மேதாவித்தனத்தின் வெளிப்பாடு என்பது அடுத்தவனின் புரியாமையில் இருக்கிறது அதை கருத்தில் கொள்வது விமர்சகனுக்கு மிகுந்த அவசியமாகிறது. (அப்பிடியே பிரியாத மாதிரியே பேசுப்பா, கொஞ்ச நாள்ல அதுவே ஒரு ஸ்டைல் ஆயிரும் எல்லாரும் லைக் போட பழகிக்குவாய்ங்க.)
- குறியீடு : குறியீடு இரு வகைப்படும், நேரடிக் குறியீடு மற்றும் மறைமுகக் குறியீடு இன்னுமொரு குறியீடு உள்ளது, அது நாமாகவே குறியீடு எனக் கொள்வது, அதற்கும் இயக்குனருக்கும் அமீபா அளவிற்கும் சம்பந்தமில்லை. 2015 இல் இந்த மூன்றாவது குறியீடுதான் விமர்சகனின் புத்தி சாலித்தனத்தை முடிவு செய்யப் போகும் வஸ்து. விமர்சனம் படிப்பவனை மிரளச் செய்து வாயடைப்புப் பணியை இதன் மூலம் மேற்கொள்ள ஏதுவாய், இப்பொழுதே களப்பனியைத் தொடங்க வேண்டும். கிழவி முறைத்தது ஏன்? பறக்கும் பேய் இதர சமயங்களில் தவழ்வது ஏன் போன்ற கேள்விகளுக்கு பதிலைக் குறியீடாக்குவது சாலச் சிறந்தது. (முறைக்கும் கிழவி வீச்சரிவாளோடு இருக்கும் அய்யனாரைக் குறிக்கிறார்.) நீதி – விமர்சகனுக்கு இயக்குனரைக் காட்டிலும் அதிக வேளைப் பளு உள்ளது, என்ன செய்வது? (சொம்மா கெடச்சுருமா மேதாவிப் பட்டம்.)
- நியோ நாயர் கடை பஜ்ஜிகள் தற்பொழுது பரவலாகிவிட்ட நிலையில் புதிய சினிமா முறைகள் மற்றும் விதிகளைத் தெரிந்து கொள்ளும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விட்டோம், அதற்காக கவலை தேவையில்லை, இதற்கு எளிய ரெமிடி கிடைத்து விட்டது, நமது பட்டிமன்றங்களிலிருந்து கிடைத்த தீர்வு, படம் நன்கு அல்லது மோசம் என்று கூறுவதே விமர்சகனின் கடமை, ஆனால் படம் பார்க்கும் பக்கிகளுக்குத் தான் அது தெரியுமே பின்னே எதற்கு விமர்சனம்? விமர்சனம் ஒரு கலை அது நமது ஏரியா. ஒரு வார்த்தையில் முடிவு சொல்லக் கூடாது, டீலில் விட்டு விட வேண்டும். நீதி – ஈயம் பூசுன மாதிரியும் இருக்கணும், பூசாத மாதிரியும் இருக்கணும்.
- சென்ற தலைமுறை சொடலைகளுக்கு மொரட்டு பீஷ் உணர்வை ஏற்படுத்த விடயம் மற்றும் அவதானித்தல் சொற்றொடர்களே போதுமாய் இருந்தது, தற்பொழுது அனைவருக்கும் இது தெரிந்து விட்டதாலும் சென்ற தலைமுறை மொரட்டு பீஷுகள் தற்பொழுது நார்மல் பீஸ்கள் ஆகி விட்டதாலும், புதிய வார்த்தைகள் தேவை. நீட்சி, படிமங்கள், ஒத்திசைவு (ஒ குறில் நெடிலல்ல) உள்ளீடு, (ளாடையல்ல ளீடு) வெளியீடு, கதை சொல்லலில் நமது காதைப் பிடித்துத் திருகுகிறார் போன்ற வலிய வார்த்தைகளும் அங்கங்கங்கே நுண்ணர்வுகளைக் கீறிக் கிழங்கெடுக்கிறார் இயக்குனர் போன்ற எளிய உவமானங்களும் அவசியம், இதையெல்லாம் படிக்கக் கிடைக்கும் இயக்குனர்கள் வியந்து நமக்கு பேட்டா கொடுக்கும் சாத்தியக் கூறுகளும் உண்டு, பேட்டா அடி கிடைத்தாலும் ஒரு அங்கீகாரமே என்று புன்னகையுடன் செல்பவனே விமர்சகன். நீதி – வெக்கம் மானம் வீரம் அறவே கூடாது.